நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவிகளிடம் சோதனை நடத்தியவர்கள், அவர்களிடம் ப்ராவை கழற்றச் சொன்ன கொடுமை கேரளாவில் அரங்கேறியுள்ளது.
நடப்பாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. தேர்வு எழுத 18 லட்சத்து 72 ஆயிரத்து 329 பேர் பதிவு செய்திருந்தனர். இவர்களில் 10.64 லட்சம் பேர் மாணவிகள்.
நாடு முழுவதும் 497 மாநகரங்களில் 3,570 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. நாட்டிற்கு வெளியே 14 மாநகரங்களிலும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான இந்த நுழைவுத் தேர்வு நடைபெற்றது. தேசிய தேர்வு முகமை இந்த நுழைவுத் தேர்வை நடத்தியது.
கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள மர்தோமா தகவல் தொழில்நுட்ப மையத்தில் நீட் தேர்வு எழுதச் சென்றவர்களிடம் மெட்டல் டிடக்டர் கொண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அப்போது, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் தாங்கள் அணிந்துள்ள ப்ராவை கழற்றுமாறு சோதனை நடத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாணவிகளின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சோதனைக்கும் தங்கள் மையத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், வெளியாட்களே சோதனை நடத்தியதாகவும் மர்தோமா தகவல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகளிடம் அவற்றை அகற்றக் கோரியுள்ளனர்.
நீட் தேர்வு எழுத செல்பவர்களிடம் சோதனை என்ற பெயரில் அடாவடித்தனமாக நடந்து கொள்வது இது முதல் முறை அல்ல என்றும் இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருப்பதாகவும் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு, ஆந்திராவைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணிடம் தான் அணிந்திருந்த தாலியை கழற்றுமாறும் அப்போது மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும் என்றும் சோதனையில் ஈடுபட்டவர்கள் கூறியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.








