கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், கலவரத்திற்குக் காரணமான அனைவரும் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், போராட்டம் நடைபெற்ற சின்ன சேலம் பகுதியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எ.வ.வேலு, சி.வி. கணேசன் ஆகியோர் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “முன்னாள் மாணவர்கள் போராட்டம் என்ற பெயரில் கலவரம் நடத்தப்பட்டது. வெளியூரைச் சேர்ந்த பலரும் முன்னாள் மாணவர்கள் என்ற பெயரில் வன்முறை செய்துள்ளதாகக் கூறினர்.
தொடர்ந்து பேசிய அவர், 3000க்கும் மேற்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டுள்ளதாகவும், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு கலவரம் நடத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்த அவர், நீதி கேட்கப் போனவர்கள் மாணவர்களின் சான்றிதழ், பேருந்துகளைக் கொளுத்தியது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.
அண்மைச் செய்தி: ‘‘தி லெஜண்ட்’ போபோபோ பாடல் வெளியானது!’
மேலும், போலீசார் நடவடிக்கையால் துப்பாக்கிச் சூடு இல்லாமல் போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த அவர், கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறியக் குழு அமைக்கப்படும் எனகூறினார். தொடர்ந்து பேசிய அவர், கலவரம் தொடர்பான கைதுகளில் எவ்வித உள்நோக்கமும் இல்லை எனவும், கலவரத்திற்குக் காரணமான அனைவரும் நிச்சயம் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் எனத் தெரிவித்தார். மாணவியின் குடும்பத்தினர் வந்த உடன் நாளை மாணவியின் உடர்கூராய்வு நடத்தப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனக் கூறினார்.








