கைத்தட்டல்கள் வந்துச்சு…ஆனால் இளையராஜா வரல…

புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி.யாக பதவியேற்கும் நாளை அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் இன்று பதவியேற்க வரவில்லை. கடந்த ஜூன் 10ந்தேதி நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் நாடு முழுவதுமிலிருந்து 57…

புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி.யாக பதவியேற்கும் நாளை அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் இன்று பதவியேற்க வரவில்லை.

கடந்த ஜூன் 10ந்தேதி நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் நாடு முழுவதுமிலிருந்து 57 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழகத்தில் காலியாக இருந்த 6 இடங்களில் திமுக சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் தேர்தெடுக்கப்பட்டனர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த 6 பேரில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மர் மட்டும் கடந்த 8ந்தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார். மற்ற 5 பேரும் அன்று பதவியேற்காத நிலையில் இன்று அவர்கள் பதவியேற்றனர். திமுக எம்.பிக்களும் மற்றும் காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரமும் தமிழில் பதவியேற்றுக்கொண்டனர்.

திமுக எம்.பிக்கள் மூவர் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் பதவியேற்கும்போது விழுமிய முறைமையுடன் உறுதிகூறுகிறேன் என்று தெரிவித்தனர். அதே நேரம் அதிமுக எம்.பி.  சி.வி.சண்முகம் பதவியேற்கும்போது கடவுள்மேல் ஆணையிட்டு உறுதி கூறுவதாக தெரிவித்தார்.

சமீபத்தில் தென்னிந்தியாவை சேர்ந்த 4 பேர் நியமன எம்.பிக்களாக நியமிக்கட்டனர். இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக, 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துறையில் சாதனைபடைத்து வருபவருமான இளையராஜா, இந்தியாவின் தங்க மங்கை என வர்ணிக்கப்பட்ட முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, பாகுலி, ஆர்ஆர்ஆர்  படங்களுக்கு திரைக்கதை எழுதிய வரும்  இயக்குனர் ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத், தர்மசாலா கோயிலின் நிர்வாகியும் சமூக சேவகருமான வீரேந்திர ஹெக்டே ஆகியோர் நியமன எம்.பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களில் ராஜேந்திர பிரசாத் இன்று எம்.பியாக பதவியேற்றுக்கொண்டார். இளையராஜாவும், பி.டி.உஷாவும் இன்று பதவியேற்கவில்லை. பதவியேற்பதற்காக இளையராஜா பெயரை மாநிலங்களவை தலைவர் வெங்கைய்யா நாயுடு  அறிவித்தபோது இளையராஜா இன்று  அவைக்கு வந்திருப்பார் என நினைத்து அவரை வரவேற்கும் விதமாக சக எம்.பிக்கள் மேஜையை தட்டி ஓசை எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால் அவர் அவைக்கு வரவில்லை என்பது தெரிந்ததும் அதனை அவையில் வெங்கைய்யா நாயுடு அறிவித்தார். அமெரிக்காவில் முக்கியமான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்ததால் இளையராஜா இன்று பதவியேற்க வரவில்லை என்று கூறப்படுகிறது.

ஆம் ஆத்மி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட புதிய எம்.பிக்களும் இன்று பதவியேற்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.