கோவையில் பல்வேறு பகுதிகளில் “நீ வா தலைவா, இலவச கல்வி தா தலைவா” என்று விஜய்யின் அரசியல் வருகை குறித்த வாசகங்களுடன் சுவரொட்டிகளை விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.
நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சமூகவலைத்தளம் மூலமாக அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வரும் நிலையில், கோவையில் பல்வேறு பகுதிகளில் விஜயின் அரசியல் வருகை குறித்த சுவரொட்டிகளை விஜய் ரசிகர் மன்றத்தினர் ஒட்டியுள்ளனர்.
நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தினர் சமீபகாலமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது, அரசியல் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள் உள்ளிட்டவற்றில் பங்கேற்பது, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் நடிகர் விஜய் 234 தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார்.இதில் விஜய்யின் கருத்துகள் அரசியல் சாயலில் இருந்தாக கருத்துகள் வெளிவந்தன.
இந்த நிலையில் நாளை விஜய் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவை மாவட்ட விஜய் தலைமை மாணவரணி சார்பில் மாநகர் முழுவதும், “நீ வா தலைவா, இலவச கல்வி தா தலைவா” என்ற வாசகங்களுடன் நகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







