தேவையான விமர்சனமும், தேவையில்லாத எதிர்ப்பும் தான் நம்மை ஓட வைக்கும் -நடிகர் விஜய்

தேவையான விமர்சனமும், தேவையில்லாத எதிர்ப்பும் தான் நம்மை ஓட வைக்கும் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே, தீ தளபதி உள்ளிட்ட பாடல்கள்…

தேவையான விமர்சனமும், தேவையில்லாத எதிர்ப்பும் தான் நம்மை ஓட வைக்கும் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே, தீ தளபதி உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.

2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற விஜய் பட இசை வெளியீட்டு விழா என்பதால், நேரு உள்விளையாட்டு அரங்கம் முன்பு அதிகளவில் ரசிகர்கள் குவிந்தனர். ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். அப்போது, லேசான தடியடி நடத்தி, போலீசார் ரசிகர்களை கலைத்தனர்.

இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா தம்பதி கலந்து கொண்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விழாவில் கலந்து கொண்ட ரசிகர்கள், செல்போன் டார்ச் லைட்டை, ஒரே நேரத்தில் ஒளிரச் செய்தனர்.

விழாவில் பேசிய நடிகர் விஜய், அன்புதான் இவ்வுலகை ஜெயிக்க கூடிய ஆயுதம் என்றார். நமக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் உறவுகளும், எதற்காகவும் நம்மை விட்டுக் கொடுக்காத நண்பர்களும் இருந்தாலே போதும் என்றும் தெரிவித்தார். ரசிகர்கள் தான் தனது போதை எனக் கூறிய அவர், வெற்றி பெற வேண்டும் என்ற போட்டியாளர் உங்களுக்குள் இருக்க வேண்டும் எனவும் கூறினார். தேவையான விமர்சனமும் தேவையில்லாத எதிர்ப்பும் தான் நம்மை ஓட வைக்கும் என்றும் நடிகர் விஜய் தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.