மாதிரி நாடாளுமன்றம் நிகழ்ச்சி நடத்திய இந்தியா கூட்டணி – டெல்லியில் பரபரப்பு!

டெல்லியில் மாதிரி நாடாளுமன்றம் நிகழ்ச்சி நடத்திய காங்கிரஸ் கட்சி, அதில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக ‘பொது பதவிநீக்க விசாரணை’ நடத்தியுள்ளது.

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் ‘பொது பதவிநீக்க விசாரணை’ (Public Impeachment) நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

தேர்தல் ஆணையர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியில் (SIR) முறைகேடுகள் நடைபெற்றதாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவுப்படி ஞானேஷ் குமார் தேர்தல் ஆணையத்தைச் செயல்படுத்தி வருவதாக கார்கே குற்றம்சாட்டினார்.

மேலும், “தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல், அவருக்கு வாழ்நாள் முழுவதும் சட்டப் பாதுகாப்பு வழங்கும் வகையில் 2023 டிசம்பரில் கொண்டுவரப்பட்ட சட்டம், அவர் நாட்டுக்கும் இந்திய அரசியலமைப்புக்கும் எதிராகச் செய்த குற்றச் செயல்களை மறைப்பதற்கான கவசமாகவே அமைந்துள்ளது. எனவே, அவர் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்” என்று கார்கே தெரிவித்தார்.

ஞானேஷ் குமார் மீது 6 முக்கியக் குற்றச்சாட்டுகள்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது 6 முக்கியக் குற்றச்சாட்டுகளை கார்கே முன்வைத்தார்.

  1. தேர்தல்களைத் திருட சதி செய்ததாகக் குற்றச்சாட்டு.
  2. 13.2 கோடி வாக்காளர்களின் பெயர்களை நீக்கியதாகக் குற்றச்சாட்டு.
  3. நாடாளுமன்றத்தின் மேற்பார்வையின்றி படிவம் 6-ல் மாற்றங்களைச் செய்ததாகக் குற்றச்சாட்டு.
  4. ECINet மூலம் வாக்காளர் பட்டியல்களைக் கைப்பற்றியதாகக் குற்றச்சாட்டு.
  5. மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களையும் கலந்தாலோசிக்காமல் முடிவுகளை எடுத்ததாகக் குற்றச்சாட்டு.
  6. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விருப்பத்திற்கேற்ப செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு.

எங்களுக்கு தனிப்பட்ட பகை இல்லை – கார்கே

இந்த நிகழ்ச்சியில் பேசிய கார்கே, “தலைமைத் தேர்தல் ஆணையர் மீது எங்களுக்கு எந்தவிதமான தனிப்பட்ட பகையும் கிடையாது. தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். ஞானேஷ் குமார் போன்றவர்கள் அரசியலமைப்புப் பதவியில் தொடர்ந்து நீடித்தால் ஜனநாயகத்துக்கு ஏற்படும் அச்சுறுத்தல் அதிகரிக்கும்” என்றார்.

ஜனநாயகத்தின் ஆன்மாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு – மீரா குமார்

முன்னாள் மக்களவைத் தலைவர் மீரா குமார் இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி நடவடிக்கைகளைத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நமது ஜனநாயக முறையைப் பின்பற்றுகின்றன. தேர்தல் நடைமுறையின் மையமாக இருப்பது வாக்காளர்கள்தான். ஒரே ஒரு வாக்காளருக்குக் கூட வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டால், அது நமது ஜனநாயகத்தின் ஆன்மாவையே பாதிக்கும். ஒருவரை வாக்களிக்க விடாமல் தடுப்பது ஜனநாயகத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் அடுத்தடுத்து உரையாற்றினர். வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் பொதுமக்களும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

நடுநிலையான நடுவர் என்ற தகுதியை இழந்துவிட்டார் – சசி தரூர்

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஞானேஷ் குமார் தேர்தல் நடைமுறையில் நடுநிலையான நடுவராகச் செயல்படும் தகுதியை இழந்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார். மேலும், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அளித்த பதவி நீக்க நோட்டீஸ்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும், அதனால்தான் இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாஜக கடும் விமர்சனம்

இதற்கிடையே, காங்கிரஸின் இந்த நடவடிக்கையை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறுகையில், “இந்தியாவில் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தியின் மனநிலைக்கு ஆறுதல் அளிப்பதற்காக, அவர் விரும்பிய நாடாளுமன்றம் இருப்பதாக ஒரு மாயையை உருவாக்கும் வகையில் மாதிரி நாடாளுமன்றத்தை நடத்துகிறது” என்று விமர்சித்தார்.

டெல்லியில் எதிர்க்கட்சிகளின் பேரணி

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, நாளை நவ.1 ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் ‘டெல்லி சலோ’ பேரணி நடைபெற உள்ளது. இதில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வலியுறுத்த உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.