மதுரையில் நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ் நடத்தும் மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் மதுரை எம்.எஸ்.எஸ் வக்பு வாரிய கல்லூரி அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு முழுவதும் 4 மண்டலங்களாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், மதுரை அருகே KLN பொறியியல் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்ற நியூஸ் 7 தமிழ் கிரிக்கெட் லீக் தொடரின் 3-வது நாள் போட்டியில், உசிலம்பட்டி P.M.T கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும், மதுரை MSS வக்பு வாரிய கல்லூரி அணியும் மோதின.
டாஸ் வென்ற உசிலம்பட்டி P.M.T கல்லூரி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மதுரை MSS வக்பு வாரிய கல்லூரி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 197 ரன்களை குவித்தது. அந்த அணியின் வீரர் விக்கி அதிரடியாக விளையாடி 63 பந்துகளில் 101 ரன்களை விளாசி கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உசிலம்பட்டி பி.எம்.டி. கல்லூரி அணி, வக்பு வாரிய கல்லூரி அணியின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் திணறியது. இதனால் அந்த அணி 12.1 ஓவர்களில் 84 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. 63 பந்துகளில் 101 ரன்கள் விளாசிய வக்பு வாரிய கல்லூரி அணி வீரர் விக்கி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
- பி.ஜேம்ஸ் லிசா








