விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண நிகழ்ச்சி வீடியோ ஒப்பந்தத்தை நெட் ஃப்லிக்ஸ் நிறுவனம் ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நெருங்கிய உறவினர்கள், திரைப்பிரபலங்கள், நண்பர்கள் மத்தியில் நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ரஜினிகாந்த், விஜய்சேதுபதி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
பலத்த பாதுகாப்புடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு சென்ற பிரபலங்கள் தங்களின் செல்போன்களை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சிகள் முழுவதையும் நெட் ஃப்லிக்ஸ் ஓடிடி நிறுவனம் 25 கோடிக்கு பெற்று கொண்டதாகவும் இந்த திருமண நிகழ்ச்சிகளை கௌதம் மேனன் இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்த பிறகு சில புகைப்படங்கள் மட்டும் வெளியானது. மற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நெட் ஃப்லிக்ஸ் நிறுவனம் வெளியிடும் என தகவல்கள் வெளியானது.
திருமணம் நடந்து ஒரு மாதம் கடந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண வீடியோக்களுக்கான ஒப்பந்தத்தை நெட் ஃப்லிக்ஸ் நிறுவனம் ரத்து செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. திருமண வீடியோக்களுக்காக 25 கோடி ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் 25 கோடி அதிகமாக உள்ளதாகவும் அந்த தொகையை குறைத்துக்கொள்ள நெட் ஃப்லிக்ஸ் நிறுவனம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அதற்கு விக்னேஷ் சிவன் மறுப்பு தெரிவித்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாகவே தற்போது தங்களின் திருமண புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஒரு மாதம் கழித்து விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி வருவதால் ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர்.
– தினேஷ் உதய்







