சிறப்பாக நடைபெற்று முடிந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தின் வீடியோ தனியார் ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள Sheraton Grand ரிசார்ட்டில் உறவினர்கள், நண்பர்கள், திரை நட்சத்திரங்கள் முன்னிலையில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. பாலிவுட் நடிகர் ஷாருக் கான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர்.
திருமண நிகழ்வில் பங்கேற்பவர்கள் புகைப்படமோ, வீடியோவோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்ற கட்டுப்பாடு விதித்தது திருமண ஜோடி. தனியார் ஓடிடி தளத்தில் இந்த திருமண நிகழ்வை ஒளிபரப்புவதாகக் கூறி ரூ. 25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததே இந்த கட்டுப்பாடுகளுக்கு காரணம். இந்த திருமண நிகழ்வை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கினார்.
இந்நிலையில், விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமண புகைப்படங்களை தனியார் ஓடிடி நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. மேலும், அவர்களது திருமண வீடியோ விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் ஓடிடி நிறுவனம் நயன், விக்கி திருமணத்தை ஒளிபரப்புவதாகக் கூறிய ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








