கிழக்கு ஐரோப்பாவுக்கு நேட்டோ கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பி வைத்துள்ள நிலையில் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நேட்டோ விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா தனது படைகளை உக்ரைன் எல்லையில் அதிக அளவில் குவிக்க தொடங்கியது. இதனையடுத்து “இந்த பதற்றத்தை எதிர்கொள்ளும் விதமாக கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் கிழக்கு ஐரோப்பாவில் நிலைநிறுத்தப்படுகிறது” என நேட்டோ அறிவித்துள்ளது. இதன் காரணமாக போர் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
1949ல் சோவியத் யூனியனுக்கு எதிராக நேட்டோ அமைப்பு உருவாக்கப்படுகிறது. இதனையடுத்து 1991ல் சோவியத் யூனியன் உடைந்தது. இதன் பின்னர் உக்ரைன் அதிலிருந்து பிரிந்து தனி நாடாக அறிவித்துக்கொண்டது. இந்த சூழலில் தற்போது, நேட்டோ கூட்டணியில் உக்ரைன் இணைய இசைவு தெரிவித்திருக்கிறது.
இந்த சூழலில், ரஷ்யா தனது துருப்புக்களை உக்ரைன் நாட்டு எல்லைகளில் குவித்துள்ளது. இதன் காரணமாக பதற்றம் அதிகரித்த நிலையில், கிழக்கு ஐரோப்பாவுக்கு நேட்டோ கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்புவதாக அறிவித்துள்ளது.
முன்னதாக கடந்த வாரம் நேட்டோவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், நேட்டோ கூட்டணி தனது விரிவாக்கத்தை நிறுத்திக்கொள்வதே பதற்றத்தை தனிக்கும் என்று ரஷ்யா தெரிவித்திருந்தது.
அதேபோல உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லையென்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் செர்கெய் ரியப்கோவ் தெரிவித்திருந்தார்.
இப்படியான நிலையில் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விதமாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.









