நேஷ்னல் ஹெரால்டு வழக்கு–சோனியாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு

நேஷ்னல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரிக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. யங் இந்தியா நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும்…

நேஷ்னல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரிக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

யங் இந்தியா நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் வைத்துள்ளனர். இந்த யங் இந்தியா நிறுவனம், சுதந்திரப் போராட்ட தலைவர்கள் அளித்த நிதியைக் கொண்டு ஜவஹர்லால் நேருவால் உருவாக்கப்பட்ட நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகையையும், அந்த பத்திரிகையை நடத்தி வந்த நிறுவனத்தையும் கையகப்படுத்தியது.

இதில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கடந்த 2013ம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரித்த வருமான வரித்துறை, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த முறைகேடு குறித்து விசாரிக்க முகாந்திரம் உள்ளதாக டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, இது குறித்து அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

சில வாரங்களுக்கு முன்பு இந்த வழக்கில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

அப்போதே சோனியா காந்தியையும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

எனினும், சோனியா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் விசாரணை தள்ளிப் போனது.

இதனையடுத்து இன்று விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சோனியா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், திமுக, என்சிபி, டிஆர்எஸ், ஆர்ஜேடி, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், நரேந்திர மோடி அரசு அரசியல் தலைவர்களை பழிவாங்கும் நோக்கில் விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்கள், தங்கள் கட்சித் தலைமையகம் அமைந்துள்ள அக்பர் ரோடுக்கு ஊர்வலமாக செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பிகார் தலைநகர் பாட்னா உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.