தேசியவாத காங்கிரஸ் கட்சி, சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் அஜித் பவார் மனு!

தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் கட்சியின் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் அஜித் பவார் மனு அளித்துள்ளார். மகாராஷ்டிரத்தில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி…

தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் கட்சியின் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் அஜித் பவார் மனு அளித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. இந்நிலையில் சிவசேனை கட்சி சார்பில் மூத்த அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, தன்னுடைய ஆதரவு எம்எல்ஏ.க்களுடன் பாஜகவில் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து மாநிலத்தின் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதையடுத்து தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. தற்போது அக்கட்சியின் தலைவர் சரத்பவாருக்கும், அவரது உறவினரும் அக்கட்சியின் முக்கியத் தலைவருமான அஜித் பவாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் சரத் பவார் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்ததுடன் செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே, பிரபல் படேல் ஆகியோரை நியமித்தார். ஆனால் அஜித் பவாருக்கு பதவி வழங்கப்படவில்லை. இதனால் அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.

பின்னர் கடந்த கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிரத்தின் 2-வது துணை முதலமைச்சராக அஜித் பவார் பொறுப்பேற்றுக் கொண்டாா். மேலும் அவருடன் 8 எம்எல்ஏக்களும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனா். மேலும், சில எம்.எல்.ஏ.க்களும், எம்.எல்.சி.க்களும் தனக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அஜித் பவார் கூறினார். இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்தை தனது தரப்புக்கு வழங்க வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்தில் அஜித் பவார் மனு அளித்துள்ளார். மேலும் தனக்கு ஆதரவாக 40 எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதுபோல சரத் பவார் தரப்பில் இருந்தும் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கட்சி தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கும் முன் தங்களது கருத்தைக் கேட்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் குறித்து சில நாள்களில் இதுகுறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.