தேசிய கீதத்தை அவமதித்ததாக தொடர்பான வழக்கில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மேல்முறையீட்டு மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2021-ம் ஆண்டு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 3 நாள் பயணமாக மும்பைக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு பல முக்கிய தலைவர்களை அவர் சந்தித்து பேசினார். இதனையடுத்து மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி, தேசிய கீதம் இசைப்பட்ட போது, எழுந்து நின்று அதற்கான மரியாதையை வழங்காமல் அவமதித்ததாக அவர் மீது பாஜகவை சேர்ந்தவர்கள் புகார் அளித்தனர். குறிப்பாக அப்போது பாஜக கட்சியின் செயலாளராக இருந்த விவேகானந்த் குப்தா என்பவர் மும்பை போலீஸ் கமிஷனருக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருந்தார்.
அதில், மும்பை நாரிமான் பாயிண்ட் பகுதியில் உள்ள ஒய்.பி.சவன் ஆடிட்டோரியத்தில் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் நடத்திய நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி கலந்து கொண்ட போது, விழா மேடையில் தேசிய கீதம் இசைக்க தொடங்கியதும், முதலில் அமர்ந்து கொண்டு பாடியவர், பிறகு திடீரென அதனை நிறுத்திவிட்டு, மேடையில் இருந்து இறங்கி பாதியிலேயே கிளம்பியுள்ளார். இந்த நிகழ்வு தொலைக்காட்சி மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவாகியுள்ளது. இதன் மூலம் மம்தா பானர்ஜி தேசிய கீதத்தை அவமதித்துள்ளார் . அதனால் தேசிய கீதத்தை இழிவுபடுத்துதல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மம்தா பானர்ஜி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறியிருந்தார். அதன்படி தேசிய கீதத்தை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில், மம்தா பானர்ஜிக்கு மும்பை நீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி சம்மன் அனுப்பியதோடு, மார்ச் 2-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தேசிய கீதத்தை அவமதித்ததாக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி விவேகானந்த் குப்தா தமக்கு எதிராக தாக்கல் செய்திருந்த, கிரிமினல் வழக்கை ரத்து செய்யக் கோரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் மும்பை பாஜக செயலாளரும், வழக்கறிஞருமான விவேகானந்த் குப்தா தனக்கு எதிராக அளித்த புகாரில் , மும்பை செவ்ரியில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் தனக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்றும் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் வழக்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் 28- ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மம்தா பானர்ஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மஜீத் மேமன், சம்மனை செஷன்ஸ் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதாகவும், இந்த விவகாரம் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டார்.
இதையடுத்து மஜீத் மேமனின் ஒத்திவைப்பு மனுவை நிராகரித்த நீதிமன்றம், வழக்கை மார்ச் 29-ம் தேதிக்கு தள்ளி வைத்தது. அதன்படி, இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் தேசிய கீதத்தை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மேல்முறையீட்டு மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில் மம்தா பானர்ஜி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. அப்படி அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டால், முதலமைச்சர் பதவி பறிபோகும் சிக்கலும் உள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா










