இன்றுடன் ஓபிஎஸ் கதை முடிந்தது – நத்தம் விஸ்வநாதன்

ஓ.பன்னீர்செல்வம் துரோகி; அவரை ஒரு நாளும் மன்னிக்க முடியாது என நத்தம் விஸ்வநாதன் காட்டமாக கூறியுள்ளார்.  அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு 16 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பின்னர் அனைவரும் எழுந்து…

ஓ.பன்னீர்செல்வம் துரோகி; அவரை ஒரு நாளும் மன்னிக்க முடியாது என நத்தம் விஸ்வநாதன் காட்டமாக கூறியுள்ளார். 

அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு 16 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பின்னர் அனைவரும் எழுந்து நின்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் அவரை வாழ்த்தி பேசினர்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்தவரும், தற்போது எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக இருப்பவருமான முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உரையாற்றினார்.

சீப்பை ஒழித்து விட்டால் திருமணத்தை நிறுத்தி விடலாம் என நினைப்பவர்களின் சூழ்ச்சியை முறியடித்து பொதுக்குழு நடைபெறுகிறது என்று விமர்சித்த நத்தம் விஸ்வநாதன், எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மூன்றாம் தலைவர் நமக்கு கிடைத்திருக்கிறார். திமுக அரசை வேரோடும், வேரடி மண்ணோடும் நீக்கும் ஒற்றைத் தலைமை தான் எடப்பாடி பழனிசாமி. எந்த வேலையை யாரிடம் தந்தால் சிறப்பாக இருக்குமோ, அந்த வேலையை அவரிடம் ஒப்படைப்பதே நல்லது என்ற வள்ளுவரின் வாக்குபடி, அதிமுகவை வழி நடத்த ஒற்றைத்தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இனி அதிமுகவுக்கு பொற்காலம் தான் என புகழ்ந்தார்.

மீண்டும் அதிமுக ஆட்சியை எடப்பாடி பழனிசாமி உருவாக்குவார் என்ற அவர், ஓ.பன்னீர்செல்வத்தைப் பற்றி எனக்கு கூடுதலாகவே தெரியும். ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்னொரு முகம் உள்ளது, அது கொடூரமான முகம். மக்களிடத்தில் அன்பாக இருப்பது போல் வேஷமிடுபவர் தான் ஓ.பி.எஸ், அது வெறும் நடிப்புதான். ஓபிஎஸ் பேசுவதற்கும், செயலுக்கும் சம்மந்தமே இருக்காது. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர் ஓபிஎஸ். அவருடனான உறவு முறிந்ததற்கு நான் மகிழ்கிறேன். தன்னையே நம்பாதவர் ஓ.பன்னீர்செல்வம் என்று காட்டமாக விமர்சித்தார்.

தொடர்ந்து, பேசிய அவர் யாரையும் வாழ விடமாட்டார் ஓபிஎஸ். பொறாமை பிடித்தவர், சூழ்ச்சி செய்பவர், துரோகம் செய்ய தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டார். எனது அனுபவத்தின் மூலம் அறிந்ததை நான் இங்கு பேசுகிறேன். தன்னை ஜெயலலிதா பாராட்டியதாக மாயத்தோற்றம் ஏற்படுத்துகிறார் ஓபிஎஸ். என் முகத்திலேயே முழிக்காதே, போ என்று ஜெயலலிதாவால் துரத்தப்பட்டவர் ஓ.பி.எஸ். 6 மாத காலம் ஓ.பன்னீர்செல்வத்துடன் பேசாமலேயே இருந்தார் ஜெயலலிதா.

ஓபிஎஸ் இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. ஓ.பி.எஸ்.ஐ ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்குமா?ஓ.பன்னீர்செல்வத்தை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆன்மாக்கள் மன்னிக்காது. அவருக்கு தெய்வம் தண்டனை தந்துள்ளது. அரசியல் அனாதை ஆகிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். ஓ.பன்னீர்செல்வத்தின் வீழ்ச்சிக்கு அவரே தான் காரணம், வேறு யாரும் காரணமல்ல. எதிரிகளைக் கூட மன்னித்துவிடலாம், ஆனால் ஓ.பன்னீர்செல்வம் துரோகி; அவரை ஒருநாளும் மன்னிக்க முடியாது. அவரின் துரோகங்களை பட்டியலிட்டால் நீண்டுகொண்டே செல்லும். அதிமுகவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் இனி அப்படி இருக்க முடியாது. அவர் கதை இன்றுடன் முடிந்தது என்று தனது உரையை முடித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.