தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தானியங்கி நாப்கின் இயந்திரங்களை வைக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
மதுரை கே.கே.நகரை சேர்ந்த பொழிலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் தற்போது கல்லூரிகள் அதிகமாகி உள்ளன. கடந்த ஆண்டுகளை காட்டிலும் கூடுதல் சதவீதமாக பெண்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். சிறிய நகரங்கள் முதல் பெரு நகரங்கள் வரை கல்லூரிகள் உள்ளன. கல்லூரிக்கு செல்லும் மாணவிகளின் சதவீதம் அதிகரித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து தமிழகத்தில் ஒட்டுமொத்த ஆண்கள் மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவிதமும் அதிகரித்துள்ளது. கல்லூரி மாணவிகள், மாதவிடாய் காலத்தில் பல சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இதை தவிர்க்கும் வகையில், அனைத்து கல்லூரிகள், பல்கலைகழங்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரங்களை வைக்க வேண்டும் என கோரியிருந்தார்.
மேலும் பயன்படுத்திய நாப்கின்களை முறையாக அப்புறப்படுத்துவதற்கு வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோதுமனுதாரரின் கோரிக்கை, நியாயமானது. தென் மாவட்டங்கள் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்கலாமே கருத்து தெரிவித்தனர்.
இந்த வழக்கில் யுஜிசி தலைவரையும் எதிர் மனுதாரராக சேர்க்கவும், வழக்கு குறித்த கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யவும் மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.