புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை ஒருமையில் பேசிய நாஞ்சில் சம்பத்திற்கு அகில இந்திய நாடார் மகாஜன சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வு கருத்தரங்கை தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 30ம் தேதி தொடங்கி வைத்தார். இதனையடுத்து பேசிய அவர், அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் சமூக வலைத்தளத்தில் தன்னை ஒருமையில் விமர்சனம் செய்துள்ளார் என வேதனை தெரிவித்தார்.
மேலும், திட்டுவதற்கு கூட மரியாதையுடன் அழகு தமிழை பயன்படுத்துங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், இரண்டு மாநிலங்களில் ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜனை தரக்குறைவாக சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்து அவரை கண்கலங்க செய்துள்ளதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், திமுகவின் தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை ஒருமையில் பேசியது சர்ச்சைக்குள்ளானதையடுத்து, கண்டனம் தெரிவித்த அகில இந்திய நாடார் மகாஜன சபை தலைவர் கார்த்திகேயன், தரக்குறைவான வார்த்தைகளை உபயோகித்து பெண்களை இழிவாக பேசுபவர்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.







