நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் உயரும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, நாடு முழுவதும் 460-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 49 சுங்கச் சாவடிகளில் 27 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அதிகாலை முதல் அமலானது.
கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரையும், பேருந்து, டிரக்குகளுக்கு ரூ.15ம், 4 முதல் 6 அச்சுகள் கொண்ட வர்த்தக வாகனத்துக்கு ரூ.25ம், கனரக வாகனத்துக்கு ரூ.30ம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து, சுங்கச்சாவடி கட்டணமும் உயர்ந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுங்கக்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். முன்னதாக மாநிலத்தில் 60 கி.மீ.க்குள் உள்ள 16 சுங்கச்சாவடிகள் அகற்றும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை என்று மாநில நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.







