நாமக்கல் அருகே கட்டுமான பணிகள் முடிவதற்குள் தண்ணீர் தொட்டி திறக்கப்பட்டதால், அது இடிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் நரைகிணறு அருகே பெரிய கிணறு பகுதியில் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு வந்தது. கட்டுமான பணிகள் முழுமையாக முடிவதற்கு முன்பாகவே தண்ணீர் தொட்டியில் நீரை நிரப்பி உள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் 100 நாள் வேலை திட்ட பணிகளில் 40க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாப்பாத்தி என்ற மூதாட்டி தண்ணீர் குடிப்பதற்காக தண்ணீர் தொட்டி அருகே நின்றிருந்த போது எதிர்பாராதவிதமாக தொட்டி இடிந்து விழுந்துள்ளது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அருகில் இருந்த மற்றொரு மூதாட்டியும் காயமடைந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழப்பை ஏற்படுத்திய தண்ணீர் தொட்டி, மாவட்ட நிர்வாகத்தின் எவ்வித அனுமதியும் இன்றி கட்டப்பட்டது எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு ஊராட்சி மன்ற உறுப்பினர் ரம்யாவின் கணவர் முருகன் தான், தன்னிச்சையாக செயல்பட்டு நீர் தொட்டி கட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் முருகனை, கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நியூஸ் 7 தமிழின் அறச்சீற்றம் பகுதியில் வெளியிடப்பட்டது. மேலும், இது குறித்து மண்டல செய்தியாளர் அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார். அப்போது, தண்ணீர் தொட்டியின் பணிகள் முழுமையாக முடிவடையாமல் இருக்கும் போதே தண்ணீர் நிரப்பியதுதான் காரணம் என்றனர். பின்னர் தகவலறிந்து வந்த நாமக்கல் எம்.பி. சின்ராஜ் அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த அவர், விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.
லிங்க் : https://www.youtube.com/watch?v=TkUc7BnrIP0&list=PLgAwhnSb8NWZuPuEJvkUQOed4j4rRSK53&index=3
இந்த செய்தி தொடர்பான முழு விவரங்களும், அந்த வீடியோ காட்சிகளும் நியூஸ் 7 தமிழ் அறச்சீற்றம் பகுதியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்..
-இரா.நம்பிராஜன்









