நடிகர் நாகர்ஜூனாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘நா சாமி ரங்கா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகனாக திகழ்பவர் நடிகர் நாகார்ஜூனா. 1967-ம் ஆண்டு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய அவர் கிட்டதட்ட 50 ஆண்டுகளாக கதாநாயகர், துணை நடிகர் என கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். தமிழிலும் கீதாஞ்சலி, ரட்சகன், தோழா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் நாகார்ஜூனா.
தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் அவர் இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடைசியாக நாகார்ஜூனா தி கோஸ்ட் படத்தில் நடித்திருந்தார். கடந்தாண்டு வெளியான இப்படத்தில் அனிகா சுரேந்திரன், சோனல் சவுகான், ரவி வர்மா, ஸ்ரீகாந்த், குல் பனாக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரின் பேனரில் தயாராகும் நாகர்ஜுனாவின் 99வது படத்திற்கு ‘நா சாமி ரங்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைப்பாளராகவும் கதை, வசனம் எழுதியுள்ளார் பிரசன்ன குமார் பெஜவாடா. படத்தை இயக்கியுள்ளார் விஜய் பின்னி.
இந்நிலையில் நடிகர் நாகர்ஜுனா பிறந்தநாளினை முன்னிட்டு இந்தப் படத்தின் அறிவிப்பு விடியோவினை படக்குழு வெளியிட்டுள்ளது. அடுத்தாண்டு சங்கராந்திக்கு படம் வெளியாகுமெனவும் படக்குழு தெரிவித்துள்ளது.







