அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்- அமைச்சர் விளக்கம்

அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இந்த கல்வியாண்டு முதல் நடைபெறாது…

அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இந்த கல்வியாண்டு முதல் நடைபெறாது என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து அதிமுக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் அரசு பள்ளிகளில் தொடர்ந்து எல்கேஜி, யுகேஜி நடைபெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் 2,381 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்குள் அமைந்த அங்கன்வாடி மையங்கள் பரிசோதனை அடிப்படையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளாக மாற்றப்பட்டு, சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்த காரணத்தால், கூடுதல் எண்ணிக்கையில் இருந்த ஆசிரியர்கள் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை எடுக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், அரசுப் பள்ளிகளின் தரத்தினை உயர்த்திட, இந்த அரசு கடந்த ஓராண்டாக எடுத்து வரும் பல்வேறு சிறப்பு முயற்சிகளின் காரணமாக, சுமார் 7 இலட்சம் மாணவர்கள் கடந்த கல்வியாண்டில் மட்டும் மாநிலம் முழுவதுமுள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் பல்வேறு வகுப்புகளில் புதிதாக சேர்ந்துள்ளனர். இதன் காரணமாக, அரசுப் பள்ளிகளில் கூடுதலாக கடந்த கல்வியாண்டில் 3,000 வகுப்புகள் (Sections) தொடங்கப்பட்டன.

அதிகமான எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கையினால் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் தேவை அதிகரித்ததையடுத்து, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் பாடம் எடுக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள், பணி மாறுதல் வாயிலாக 1 முதல் 5 வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக அண்மையில் சென்றுள்ளனர். இருப்பினும், சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் தொடர்ந்து அவர்களது கல்வியினை தங்கு தடையின்றி பெற அனைத்து நடவடிக்கைகளும் அரசால் எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரைக்கிணங்க, அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கென தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Video Link for this News : https://www.youtube.com/watch?v=UVo6rosZZVo

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.