மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவது எனது யோசனை. இதனை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசை பார்த்து பொறாமைப் படவில்லை, பாராட்டுகிறேன். என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
லயோலா கல்லூரி நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது:
லயோலா கல்லூரி நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தால் மற்ற சில வேலைகளை ஒத்திவைத்து வருவது எனக்கு பிடிக்கும். மணிப்பூரில் இருந்து வந்த மாணவர்களுக்கு லயோலா கல்லூரியில் இடம் கொடுத்ததற்கு எனது பாராட்டுகள். மணிப்பூரில் இனி படிப்பும் நடக்காது, விளையாட்டும் நடக்காது, கலையும் இருக்காது. மாணவர்கள் வந்து படிப்பதற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று இந்த மேடையில் முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன்.
2000 ஆண்டுகளாக திராவிட மாடல் தான் எங்களுக்கு. அரசியல் நம்மை ஏசுகிறது. அரசியல் பேச கூடாதா?. நீங்கள் எல்லாம் படிப்பது வேலைக்காக தான். ஆனால் வேலை இருக்கணுமே. நீங்கள் ஓட்டு போடும் வயதிற்கு வந்துவிடீர்கள். எத்தனை பேர் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளீர்கள். அதை வாங்க வேண்டும் நீங்கள்.கையில் புள்ளி வைப்பதற்கு முன் நாளை யாரை ஆள வைக்க போகிறீர்கள் என்கிற கவலை வேண்டும்.
ஒட்டு போட்டால் எல்லாம் சரியாகி விடுமோ என்று எதையும் கூறமுடியாது. நாட்டை ஜனநாயக நாடாக மாற்ற வேண்டியது நம் கடமை. கட்டை விரலில் நோய் வந்தால் தலையே விழுந்துவிடும். கைகளை கட்டிக் கொண்டு கிராமத்திலிருக்கும் அரசியல் பேசும் பெரியவர்களை பார்த்து முறைத்தாலே போதும். அங்கே இருக்கிறவர்கள் போலியாக எழுதிய கணக்கு புத்தகத்தை எடுத்து நீட்டுவார்கள்.
நாட்டிற்கு யார் அவசிய தேவை என்கிற கேள்விக்கு காந்தியே திரும்பி வருவது என்பது முடியாது. ஆனால் காந்தியை போன்ற நபர் வேண்டும். வாழ்க்கைக்கு பணம் எவ்வளவு முக்கியம் என்கிற கேள்விக்கு. சோறு, தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாது. அதை வாங்க பணம் ஒரு கருவி தான். பணம் பேசா மடந்தை.
மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவது எனது யோசனை. இதனை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசை பார்த்து பொறாமைப் படவில்லை, பாராட்டுகிறேன். இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.







