மகாராஷ்ட்ராவில் அமைந்துள்ள தனது தலைமையிலான அரசு முழு பதவிக் காலத்தையும் நிறைவு செய்யும் என்று முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ர முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சராக தேவேந்திர பட்னவிசும் கடந்த ஜூன் 30ம் தேதி பதவி ஏற்றனர்.
இதையடுத்து முதன்முறையாக இருவரும் நேற்று டெல்லி வந்தனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை மரியாதை நிமித்தமாக சந்தித்த அவர்கள், பின்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர். இந்த சந்திப்பு சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. அப்போது, புதிய அமைச்சரவை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த இருவரும் பின்னர், பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போதும், அமைச்சரவையை இரு தரப்பும் எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், புதிய அமைச்சரவை பதவி ஏற்பை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பாக நடத்தி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமைச்சரவையில் ஷிண்டே தரப்புக்கு 11 இடங்களை ஒதுக்க பாஜக முன்வந்திருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. பாஜக சார்பில் 29 பேர் அமைச்சர்களாவார்கள் என்றும் கூறப்பட்டது.
ஜெ.பி. நட்டா உடனான சந்திப்புக்குப் பிறகு இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, மகாராஷ்ட்ராவில் தற்போது வலிமையான அரசு அமைந்திருப்பதாக தெரிவித்த அவர், ஆளும் கூட்டணி தரப்பில் 164 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும், எதிர் தரப்பில் 99 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும் கூறினார். தனது தலைமையிலான அரசு அதன் முழு பதவிக் காலத்தையும் பூர்த்தி செய்யும் என்றும் அடுத்த தேர்தலிலும் தங்கள் அணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் ஷிண்டே நம்பிக்கை தெரிவித்தார்.
பாஜக தான் சிவ சேனாவின் இயற்கையான கூட்டணி என தெரிவித்த ஷிண்டே, பாஜகவுடன் கூட்டணி அமைக்குமாறு 3-4 முறை உத்தவ் தாக்கரேவிடம் கூறியதாகவும் ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, சிவ சேனா எம்எல்ஏக்கள் அச்சுறுத்தப்பட்டதாகவும், சுதந்திரமாக பேசிக்கொள்ளவும் முடியாத நிலை இருந்ததாகவும் தெரிவித்த ஷிண்டே, அதன் காரணமாகவே கிளர்ச்சியில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டார்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மகாராஷ்ட்ராவில் புதிய அரசு அமைந்திருப்பதை குறிப்பிட்ட துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ், அவரது தலைமையின் கீழ் நாங்கள் பணிபுரிவோம் என்றார்.
பத்திரிகையாளர் சந்திப்பை அடுத்து இருவரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.










