”கர்நாடகாவின் நலன் கருதி எனது தந்தையை முதலமைச்சராக்க வேண்டும்” என முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் யதிந்திர சித்தராமையா தெரிவித்துள்ளார்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும் என்பதால், இன்று பிற்பகலுக்குள் கர்நாடகாவில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது தெரிந்துவிடும்.
காலை 9 மணி நிலவரப்பட்டு காங்கிரஸ் கட்சி 110-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 93 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகின்றன.
இந்த நிலையில் தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் யதிந்திர சித்தராமையா தெரிவித்ததாவது..
“ பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம். கர்நாடகத்தின் நலன் கருதி எனது தந்தை சித்தராமையை முதலமைச்சராக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.







