சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான ‘அனைத்தும் சாத்தியம்’ எனும் அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள மாற்றுத் திறனாளிகள் ஆணையரகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில், மாற்றுத் திறனாளிகள் தங்களது வீடுகளில் சமையல் அறை, குளியல் அறை , வரவேற்பறை உள்ளிட்டவற்றை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
காய்கறிகள் உள்ளிட்ட சமையலறைப் பொருட்கள் , குளியலறைக்குத் தேவையான பொருட்கள் , அறைகளில் புத்தக அலமாரிகளை குறிப்பிட்ட உயரத்தில் அமைத்துக் கொள்ளுதல் என குறிப்பிட்ட முறையில் அறைகளை அமைத்துக் கொள்ளும்போது பார்வைத் திறன் குறைபாடு உள்ளிட்ட அனைத்துவகை மாற்றுத் திறனுடையோரும் பிறருடைய உதவியின்றி இயங்க முடியும் என்பதை விளக்கும் விதமாக அருங்காட்சி அமைந்துள்ளது.
மேலும், அருங்காட்சியகத்திற்கு வருகைதரும் மாற்றுத்திறனுடையோர் படிப்பதற்கான
புத்தகங்கள் , இசைகளை மீட்டி கேட்டு மகிழ்வதற்கான இசைக்கருவிகள் , உலக ,
இந்திய வரைபடங்கள் , சதுரங்கம் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களும்
இடம்பெற்றுள்ளன. தமிழக அரசின் ஒரு கோடி ரூபாய் நிதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்திற்கான வடிவமைப்புகளை வித்யா சாகர் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் செய்துள்ளனர்.
இந்த அருங்காட்சியம் குறித்து கூறிய வித்யா சாகர் அமைப்பின் இயக்குநர் ராதா ரமேஷ் கூறுகையில், பெரிய அளவிலான செலவுகள் இன்றி அனைத்து மாற்றுத் திறனாளிகளும் தங்களது வீடுகளில் தாங்கள் காட்சிப்படுத்தியுள்ள வகையில் அறைகளை அமைத்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.
அருங்காட்சியகத்தை திறந்துவைத்த முதலமைச்சர் தையல் இயந்திரம் , இருசக்கர
நாற்காலியுடனான வாகனம் மற்றும் பேட்டரி வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் , சுமார் ஒன்றரை மணி நேரம் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரக அதிகாரிகளுடன் மாற்றுத் திறனுடையோருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார்.
-ம.பவித்ரா








