தமிழக அரசுப் பேருந்துகளில் இந்த ஆண்டு இறுதிக்குள் இ-டிக்கெட் அளிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:
பள்ளிப் பேருந்துகளில் முன்னும், பின்னும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது கண்காணிக்கப்படும். பேருந்துகளில் இந்த ஆண்டுக்குள் இ-டிக்கெட் கொண்டு வர பணிகள் நடைபெற்று வருகிறது. தொழில்நுட்ப வசதிகள் முழுமையாக பயன்படுத்தப்படும். சென்னையில் பேருந்துகளில் பேனிக் பட்டன் பொருத்தப்பட்ட பிறகு புகார்கள் வரவில்லை. பலரும் சோதனை செய்வதற்காக பேனிக் பட்டனை அழுத்தும் நிலை காணப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணி நடைபெறுகின்றது. பஸ் பாஸ் கிடைக்கும் வரை மாணவர்கள் பழைய பஸ் பாஸ், சீருடையுடன் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்.
சென்னைக்கு அடுத்து சேலத்திலும் பேருந்து நிறுத்தங்களை அறிவிக்கும் வசதி கொண்டு வரப்படவுள்ளது. மற்ற போக்குவரத்துக்கழகங்களிலும் பேருந்து நிறுத்தங்களை அறிவிக்கும் வசதி கொண்டு வரப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
-மணிகண்டன்








