தனது திருமண நாளுக்கு கிடைத்த பரிசாக மும்பை இந்தியன்ஸ் அணியின் எலிமினேட்டர் சுற்று வெற்றியை பார்ப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபயர் 2-க்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் நேற்று ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 25வது திருமண நாளை கொண்டாடினார். ஐபிஎல் எலிமினேட்டர் போட்டிக்குப் பின்னர், மும்பை அணி வீரர்களுடன் கலந்துரையாடிய சச்சின், “என்னுடைய திருமண நாளுக்கு கிடைத்த பரிசுகளில் இதுதான் மிகவும் சிறந்தது. கிரீன் மற்றும் சூர்யகுமாரின் பார்ட்னர்ஷிப் வெற்றிக்கான வாய்ப்பை எளிதாக்கும் என்று நினைத்தோம். இந்த பெரிய மைதானத்தில் 182 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான். அணியின் ஃபீல்டிங் மிகவும் அருமையாக இருந்தது. ஆகாஷ் மத்வால் அபாரமாக பந்துவீசினார். தொடர்ந்து இதேபோல் அவர் சிறப்பாக விளையாட வேண்டும்” என்று தெரிவித்தார்.







