இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் குழப்பம் எழுந்ததால், எம்.டெக் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக் உயிர் தொழில்நுட்பவியல், எம்.டெக் கணக்கீட்டு உயிரியல் திட்டம், ஆகிய படிப்புகளில் சேருவதற்கு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பட்டதாரி திறன் தேர்வு எழுதி, தேர்ச்சி பெறும் மாணவர்கள், தகுதியின் அடிப்படையில் சேர்க்கப்படுவர், என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக, திறன் நுழைவுத் தேர்வு 3 முறை ஒத்திவைக்கப்பட்டு, பின் கடந்த அக்டோபரில் நடைபெற்றது.

இதையடுத்து 2 பாடப்பிரிவுகளிலும் சேர, மொத்தம் உள்ள 45 இடங்களுக்கு, சுமார் 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், 2020-21-ம் கல்வியாண்டுக்கான M.Tech., உயிர் தொழில்நுட்பவியல் மற்றும் M.Tech., கணக்கீட்டு உயிரியல் படிப்புகளுக்கு, மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறை மாநில அரசால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக எம்.டெக் படிப்பில் இந்த இரு பாடப்பிரிவுகளில், 2020-21ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடர முடியவில்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.







