தொகுதிவாசியின் கோரிக்கைகளுக்கு சட்டென இணையத்தில் பதிலளிக்கும் எம்.பி

சமீபகாலங்களாக சமூக வலைத்தளங்கள் வழியாக அரசு நிர்வாகிகளை அணுகுவதும் அதன் மூலம் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் போக்கும் அதிகரித்துவருகிறது. ஆக்கப்பூர்வமான இந்த மாற்றம் வவேற்கதக்கதாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள…

சமீபகாலங்களாக சமூக வலைத்தளங்கள் வழியாக அரசு நிர்வாகிகளை அணுகுவதும் அதன் மூலம் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் போக்கும் அதிகரித்துவருகிறது. ஆக்கப்பூர்வமான இந்த மாற்றம் வவேற்கதக்கதாகவே கருதப்படுகிறது.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை குறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக வலைத்தள பயனாளி எம்.பி ஒருவருக்கு கோரிக்கை வைத்திருந்ததும், அதற்கு எம்.பி பதிலளித்திருப்பதும் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.

விருதுநகர் அரசு மருத்துவமனையில், தம்பதி ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்தும் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள விடயங்கள் குறித்தும் பேஸ்புக் மூலமாக கவனப்படுத்தியிருந்தார். இதில், “உட்கட்டமைப்பு சார்ந்த கழிவறை, வருகையாளர் தங்குவதற்கான வசதியின்மை போன்ற குறைகள் களையப்பட்டு மேலும், தனி கவனம் செலுத்தினால் சிக்ஸ் சிக்மா அளவிற்கு அரசு மருத்துவமனைகள் தரம் உயரும்” என குறிப்பிட்டிருந்தார்.

இவரின் கோரிக்கைக்கு பேஸ்புக்கில் பதிலளித்திருந்த காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர், “2011ல் எய்ம்ஸ் முயற்சி தொடங்கி எனது தொகுதிக்கு உட்பட்ட விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனைத்து கட்டமைப்புகளையும் இதுநாள் வரை மேம்படுத்திகொண்டு இருக்கிறேன்.

அடித்தட்டு, விளிம்புநிலை மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் கிடைக்க வழிவகை செய்யுங்கள் என எங்கள் தலைவர் ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார்.

தங்களது கோரிக்கைகளும் வெகு விரைவில் நிறைவேற்றப்படும். ஆலோசனைக்கு நன்றிகள். உங்கள் குழந்தை செல்வத்திற்கு எனது வாழ்த்துகள்.” என்று கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பொதுமக்களின் பிரச்னைகள் விவாதிக்கப்படுவதும், அவை தீர்வுகளுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்ந்து வரும் நிலையில், அரசு அதிகாரிகள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் ஆகியோர் இதில் தீவிரமாக இயங்கத் தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் எம்.பி., மாணிக்கம் தாகூரும் மிளிர்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.