தேனி மாவட்டம், சுருளி அருவியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் இன்று சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருக்கும். இந்த அருவியில் குளிப்பதற்காக நாள்தோறும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த சுருளி அருவி வனப்பகுதிகளில் யானை, காட்டெருமை, மான், கரடி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பது வழக்கம்.
இந்நிஅலியில் இன்று அருவியின் நீர்வரத்தை கண்காணிக்க சென்ற ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக ஊழியர்கள் அருவியின் வளாகத்தில் யானைக்கூட்டம் நிற்பதை பார்த்து சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவில்லை. இதனால் குளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து திரும்பினர்.
இது தொடர்பாக கம்பம் கிழக்கு வனச்சரகர் வி.பிச்சைமணி கூறுகையில், இன்று அருவியின் நீர்வரத்தை கண்காணிக்க சென்ற போது யானைக்கூட்டம் நின்று கொண்டிருந்தது. யானைகள் வனப்பகுதிக்குள் செல்லும் வரை அருவியில் குளிக்க அனுமதி கிடையாது. யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்” இவ்வாறு தெரிவித்தார்.
சாலையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் அருவியில் சுற்றுலா பயணிகள் சென்று குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் யானைகள் அப்பகுதியை விட்டு கடந்த பின்பு தான் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்க படுவார்கள் என்று வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.




