தாய்மார்கள் பாலூட்டும் அறை சீரமைக்கப்படுமா?

பராமரிப்பின்றி காணப்படும் தாய்மார்கள் பாலூட்டும் அறைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்கப்படும் என அப்போதைய முதலமைச்சர்…

பராமரிப்பின்றி காணப்படும் தாய்மார்கள் பாலூட்டும் அறைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்கப்படும் என அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி அடுத்த மாதமே மாநகராட்சி நகராட்சி பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த அறையில் மின்விளக்கு மின்விசிறி மேஜை என தேவையான அனைத்து பொருட்களும் அமைக்கப்பட்டிருந்தது.

இதன்மூலம் பயணத்தின்போது கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள் படும் அவதி தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சியில் உள்ள காமராஜர் நினைவு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறை பராமரிப்பின்றி உள்ளது.

அறையில் கதவுகளுக்கு தாழ்ப்பாள் இன்றியும் மின்விளக்கு, மின்விசிறி, மேசை என எந்த வசதியும் இல்லாமலும் காணப்படுகிறது. தினம் நூற்றுக்கணக்கான பயணிகள் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். பராமரிப்பின்றி காணப்படும் அறையை பயன்படுத்த முடியாமல் கைக்குழந்தையுடன் வரும் பெண்கள் அவதிப்படுகின்றனர். அதனை விரைந்து சரி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மாரிதங்கம், மாணவ ஊடகவியலாளர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.