கடலூர் அருகே பிறந்த நாள் கொண்டாடிய தாய்க்கு உண்டியல் மூலம் சேமித்த பணத்தில் மகன் அளித்த சர்ப்ரைஸ் கிப்ட் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்தவர்கள் மணிகண்டன், வினோதினி தம்பதி. செவிலியராக பணியாற்றும் வினோதினிக்கு கோவர்த்தனன் என்ற 6 வயது மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது தாயின் பிறந்த நாளை (ஜுலை 12 ) முன்னிட்டு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை கோவர்த்தனன் பரிசாக அளித்துள்ளார்.
அதாவது பள்ளி முடிந்தவுடன் தனது தந்தையை கடைக்கு அழைத்து சென்ற மாணவன், நாள்தோறும் சேமித்த வைத்த உண்டியல் பணத்தில், 40 ரூபாய்க்கு மகாராணி கீரிடம், 50 ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிறந்த நாள் கேக், 10 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கி வந்துள்ளான். இதனைத்தொடர்ந்து வீட்டுக்கு சென்ற கோவர்த்தனன், தனது அம்மாவை அழைத்து கேக் வெட்ட சொல்லி ஹேப்பி பர்த் டே தெரிவித்துள்ளான். பின்னர் தான் வாங்கி வந்த கிப்டை பிறந்தநாள் பரிசாக அம்மாவுக்கு அளித்துள்ளான். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.





