மேற்குவங்கத்தில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடும் ஆசையில் ஐபோன் வாங்க 8 மாத குழந்தையை தாய், தந்தையே விற்ற கொடூர நிகழ்வு நடந்தேறியுள்ளது.
சமூக வலைதளங்களுக்கு பலர் அடிமையாகி போயிருப்பது தற்போது கிளம்பியிருக்கும் சமூக பிரச்னைகளில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவதற்காக அவர்களிடம் செல்போன்களை பெற்றோர் கொடுப்பதில் தொடங்குகிறது இந்த பிரச்னை. இதன் தொடர்ச்சியாக பள்ளி மாணவர்கள் முதல், இளைஞர்கள் வரை பலர் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூ டியூப், ட்விட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்களை அறியாமலேயே பல மணி நேரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை உடல்ரீதியான பிரச்னைகளுக்கும், மனரீதியான பிரச்னைகளுக்கும் ஆளாகி வருகின்றனர் என்கிற ஆய்வறிக்கைகள் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சியை அளித்து வருகிறன.
இந்த தகவல்களை உறுதிபடுத்தும் வகையில் தற்போது மேற்கு வங்கத்தில் ஒரு நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. 10 மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தையை தாயே தனது கணவருடன் சேர்ந்து சமூக வலைதள மோகத்தால் விற்றிருக்கிறார். அதுவும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காக ஐபோன் வாங்க காசில்லாததால், குழந்தையை விற்று ஐபோன் வாங்கியிருக்கின்றனர் இந்த தம்பதி. மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தை சேர்ந்த ஷதி, ஜெயதேவ் என்கிற தம்பதி தான் இத்தகைய செயலை செய்திருக்கின்றனர்.
இந்த தகவல் எப்படியோ வெளி உலகில் கசிய, குழந்தையை விற்ற தாய் ஷதி மற்றும் வாங்கிய பிரியங்கா கோஷ் என்ற பெண் ஆகியோரை மேற்கு வங்க போலீசார் கைது செய்துள்ளனர். அதோடு தலைமறைவாக உள்ள குழந்தையின் தந்தை ஜெயதேவை போலீசார் தேடி வருகின்றனர்.







