திருமங்கலம் அருகே கள்ளிகுடி பகுதியில் ஒரே தேர்வு மையத்தில் தாய் மற்றும் மகள் TNPSC குரூப் 4 தேர்வு எழுதினர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம், என்ஜிஓ நகரைச் சேர்ந்தவர் ரவி – வளர்மதி தம்பதி. ரவி ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். பிளஸ் 2 வரை படித்திருந்த வளர்மதி 2 முறை TNPSC தேர்வு எழுதியுள்ளார். வறுமை மற்றும் திருமணம்., வயது காரணமாக தொடர்ந்து தேர்வு எழுத முடியாமல் போனது. திருமணம் முடிந்து மூன்று பிள்ளைகளுக்குத் தாயான பிறகு BA.தமிழ் பட்டப்படிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முடித்துள்ளார்.
இவரது மகள் சத்யபிரியா நீட் தேர்வுக்கு படித்து 2 முறை தேர்வும் எழுதியுள்ளார். இந்த நிலையில் வளர்மதி TNPSC தேர்வினை மீண்டும் எழுத முடிவு செய்து அதே நேரத்தில் தனது மகளையும் உற்சாகப்படுத்தும் விதமாக தம்முடன் சேர்ந்து தேர்வு எழுத வேண்டும் என தாய் கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து, சத்யபிரியாவும் TNPSC தேர்வுக்கு விண்ணப்பித்தார். தற்போது இருவருக்கும் ஒரே தேர்வு மையமாக கள்ளிக்குடி, அரசு மேல்நிலைப் பள்ளியில் TNPSC தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், TNPSC தேர்வு மையத்தில் தாயும், மகளும் தேர்வு எழுத வந்தனர்.
-ம.பவித்ரா








