ஆஃப்பாயிலில் பெப்பர் அதிகமாக உள்ளது எனக்கூறி, குடிபோதையில் மாஸ்டரை தாக்கி ஓட்டலை சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி மெயின் ரோட்டில் 36 வயதான குமரேசன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார் . இந்நிலையில் நேற்று இவரது கடைக்கு கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த 4 பேர் குடிபோதையில் வந்துள்ளனர் . அப்போது அவர்கள் நான்கு பேரும் கடையில் சாப்பிட்டு கொண்டிருந்த போது ஆப்பாயில் கேட்டுள்ளனர்.
மாஸ்டரும் ஆஃப்பாயில் போட்டு கொடுத்துள்ளார். பின்னர் ஆஃப்பாயில் ஒழுங்காக போடவில்லை பெப்பர் அதிகமாக உள்ளது எனக்கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கடை உரிமையாளர் குமரேசன் கேட்ட போது அவரையும் கடையில் இருந்த ஊழியர்களையும் தாக்கியுள்ளனர். பின்னர் கடையில் இருந்த மாவு, முட்டைகளை கீழே தள்ளி சூறையாடியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஓட்டல் உரிமையாளர் குமரேசன் கெங்கவல்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஓட்டலில் இருந்த சிசிடிவி, கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அதில் குடிபோதையில் இருந்த நபர்கள் ஓட்டல் மாஸ்டர் மற்றும் உரிமையாளரை தாக்கியது வீடியோவில் பதிவானது தெரியவந்தது.
இதனையடுத்து ஆஃப்பாயிலுக்காக குடிபோதையில் ஓட்டலை சூறையாடிய அதிமுக பிரமுகர்களான பிரவீன் , பிரபு , கெளதம் , நடராஜ் ஆகியோர் மீது 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், இவர்கள் 4 பேர் மீதும் ஏற்கனவே கெங்கவல்லி பேரூராட்சி தலைவர் மகனை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







