பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை. மத்திய அரசின் சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தொழில்த்துறை அமைச்சர் பியூஸ்கோயல், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 36 பேர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்தி, ஜெய்ராம் ரமேஷ், திமுக சார்பில் திருச்சி சிவா, டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காலை 11 மணிக்கு தொடங்கவிருக்கும் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, அக்னி பாத் திட்டம், இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்த கூட்டத்தொடரில் 24 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வனப்பாதுகாப்பு திருத்த மசோதா, தேசிய பல் மருத்துவ ஆணையம் மசோதா, ஒன்றிய பல்கலைகழகங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. முதல் நாளன்று குடும்ப நல நீதிமன்ற திருத்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரஜ்ஜூ மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.