29.2 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

பருவமழை; முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஆலோசனை

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (அக்.26) காலை ஆலோசனை மேற்கொண்டார்.

தலைமைச்செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குனர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது பேசிய அவர், “அரசுத் துறையின் செயல்பாடும், பொது மக்களின் எண்ணமும் ஒன்றிணைய வேண்டும். இயற்கையை எதிர்கொள்ளும் மனநிலையை மக்களுக்கு முதலில் உருவாக்க வேண்டும். அதற்காக, முன்னெச்சரிக்கை முயற்சிகளாக அரசு எதையெல்லாம் செய்யவிருக்கிறது என்பதையும் மக்களுக்கு நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும். உங்கள் செயல்பாடுகள் அனைத்தும் மக்களோடு இணைந்தே இருக்கும்படி நீங்கள் திட்டமிட வேண்டும்.

இந்திய வானிலை ஆய்வு மையம் உள்ளிட்ட அரசு அமைப்புகளிலிருந்து வரப்பெறும் முன்னெச்சரிக்கை செய்திகள், சமூக ஊடகங்கள், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வாயிலாகவும், பொது மக்களுக்கும், மீனவர்களுக்கும் உடனுக்குடன் நீங்கள் தெரிவிக்க வேண்டும்.

பேரிடர் காலங்களில் நன்கு சேவையாற்றக்கூடிய தன்னார்வத் தொண்டு அமைப்புகளை நீங்கள் தயவு செய்து ஊக்கப்படுத்த வேண்டும். சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையமும், 38 மாவட்டங்களில் உள்ள மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும், 24 மணி நேரமும் உரிய துறை அலுவலர்களோடு செயல்படவேண்டும்.

இந்த மையங்களை பொது மக்கள் 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்புகொள்ளலாம். இந்தத் தகவல் அனைத்துப் பொது மக்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். 100 என்று சொன்னால், அது காவல் துறை. 108 என்று சொன்னால், அது அவசர ஆம்புலென்ஸ் என்று மக்கள் மனதிலே பதிந்திருக்கிறது. அதைப்போல, இந்த எண்களும் மக்கள் எளிதில் பயன்படுத்தும் சொற்களாக மாற வேண்டும்.

இந்த நேரத்தில் மீனவர்கள் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தியாக வேண்டும். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்களுக்கும், கரையில் உள்ள மீனவர்களுக்கும், வானிலை முன்னறிவிப்பு குறித்து, நவீனத் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும், மீனவளத் துறை மூலமாகவும் தொடர்ந்து தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த மழைக்காலத்தில், அவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருந்துகொண்டேயிருக்க மீன்வளத் துறை தக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

அனைத்து மீனவர்களது உயிரும் நமக்கு முக்கியம் என்பதை கடலோர மாவட்டங்களைச் சார்ந்த ஆட்சியாளர்களும், காவல் துறை கண்காணிப்பாளர்களும் நினைவில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

பருவமழை காலத்தின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அளிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை நீங்கள் தவறாது பின்பற்ற வேண்டும்.

பாதிப்பிற்குள்ளாகும் பகுதிக்கென தனித்தனியே பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, ஏழை எளிய மக்கள் வசிக்கும் குடிசைப் பகுதிகள், கடலோர மீனவக் குடியிருப்புகள் ஆகிய இடங்களின் நிலைமையை இந்தக் குழுக்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து, உரிய நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

தூர்வாரப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள், வரத்துக் கால்வாய்கள், நீர்வழிப் பாதைகள் உள்ளிட்டவை சரியாக உள்ளனவா என்பதை நீங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அவசரகாலப் பணிகளை மாவட்டங்களில் மேற்கொள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள செய்தியை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அனைத்து மாவட்டங்களுக்கும், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களுக்கும், கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்துறை அலுவலர்கள், மாவட்டத்தில் பாதிப்பிற்குள்ளாகும் அனைத்துப் பகுதிகளையும் ஆய்வு செய்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 25 ஆம் தேதியன்று சென்னையின் பல்வேறு இடங்களுக்கு நானே சென்று, நேரிடையாகப் பார்வையிட்டது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

காந்தி மண்டபம் சாலை மற்றும் இதர பகுதிகளில், வடிகால்கள் தூர்வாரக்கூடிய பணியினையும், வண்டல் வடிகட்டும் தொட்டிகளை (Silt Catch Pit) தூய்மைப்படுத்தும் பணியினையும், மழை / வெள்ளநீர் தங்குதடையின்றி செல்லக்கூடிய வகையில் வேளச்சேரி ஏரி மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் ஆகாயத் தாமரையினை அகற்றும் பணியினையும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கழிவுகளை அகற்றும் பணியினையும், நாராயணபுரம் ஏரியில் அமைக்கப்பட்டு வரும் பெரும் வடிகால் பணியினையும் அன்று நேரிடையாக நான் சென்று பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இதேபோல் நீங்கள் அனைவரும் பணிகளை முடுக்கி விட வேண்டும்.

செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளை கடந்த 20 ஆம் தேதியன்று பார்வையிட்டு, உரிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன்.

தற்போது தமிழ்நாட்டில் பரவலாக மழைபெய்து வரும் நிலையில், பெரும்பாலான அணைகள் / நீர்த்தேக்கங்கள், ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளன. எனவே, முழுகொள்ளளவை எட்டியுள்ள அணைகள் / நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அணைகளில் உடைப்பு ஏற்படாமல் இருக்க அவ்வப்போது உபரி நீரை வெளியேற்றி, அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வெள்ள அபாயம் ஏற்படுவதைத் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தடி நீரைச் செறிவூட்டவும், வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்கவும் உரிய நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

அணைப் பாதுகாப்பு, அணைகள் / நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் வெளியேற்றுவது தொடர்பான விதிமுறைகளைத் தவறாது பின்பற்றி, உபரி நீர்த் திறப்பு குறித்து பொது மக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கைகளை வழங்கி உபரி நீரைத் திறந்து விட வேண்டும்.

பருவமழை காலத்தில் பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இருப்பில் வைப்பதற்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றவும், தாழ்வாகச் செல்லக்கூடிய மின்கடத்திகளைச் சரிசெய்திடவும், Pillar Box–களை உயர்வான இடங்களில் வைக்கவும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மழைநீர் தேங்குவதால் பயிர்கள் மூழ்கி சேதமாகும் சூழல் ஏற்பட்டு விடக்கூடாது. எனவே, வடிகால்களைத் தூர்வார வேண்டும். அறுவடை செய்த நெல்மணிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.

மழைக் காலங்களில் நோய்கள் அதிகம் உருவாகி, பரவிடக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நீங்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

உயிர்காக்கும் மருந்துகள், மருந்து உபகரணங்கள், பாம்புக் கடிக்கான மாற்று மருந்தும், ஆக்சிஜன் உருளைகள், மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள் போன்றவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பாதிப்பிற்குள்ளாகும் மக்களை மீட்கும்போது, மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், வயதானவர்களுக்கு முன்னுரிமை அளித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை மாவட்ட ஆட்சியர்கள் தாமதமின்றி வழங்க வேண்டும்.” என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading