சுமார் ஒரு லட்சம் ஃப்ரஷர்களுக்கு ஐடி துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியபோது, ஏராளமானோர் வேலைவாய்ப்புகளை இழந்தனர். இதன் காரணமாக புதியவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்காமல் போனது. தற்போது கொரோனா சூழ்நிலை தணியத் தொடங்கியபின் படிப்படியாக வேலைவாய்ப்புகளும் உயர்ந்துகொண்டே வருகின்றது.
இந்நிலையில், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்சிஎல் போன்ற இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஒரு லட்சம் ஃப்ரஷர்களை பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 35,000 ஃப்ரஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக டி.சி.எஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல, எச்.சி.எல் நிறுவனம் கேம்பஸ் இண்டர்வியூ வாயிலாக 22000 ஃப்ரஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து அடுத்த ஆண்டிலும் எச்.சி.எல் நிறுவனம் 30,000 ஃப்ரஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல, இன்ஃபோசிஸ் நிறுவனமும் புதிய ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.








