கல்வி பயில பணம் தடையாக இருக்கக்கூடாது என சென்னை மாநில கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் 1,995 மாணவர்களும், 1,214 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் 1 என மொத்தம் 3,210 மாணாக்கர் பட்டமளிக்கும் விழா இன்று நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லூரி வளாகத்தில் மரக்கன்று ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் நட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, நான் பட்டம் பெற்றபோது கூட, அங்கி அணிந்து சென்று பட்டம் பெறவில்லை. ஆனால் இன்று அங்கி அணிய வைத்த முதலமைச்சருக்கும், உயர் கல்வித்துறை அமைச்சருக்கும் நன்றி. மாநில கல்லுரி மாணவர்கள் சிற்றுண்டி கட்டிடம் சரியாக இல்லாமல் இருப்பதால் சரி செய்து கொடுக்க கோரிக்கை வைத்த்துள்ளனர். அது விரைவில் சரி செய்யப்படும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும். நான் படித்த கல்லூரியில் கலந்து கொள்வது மகிழ்ச்சி. உங்கள் சீனியர் என்ற முறையில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் பிரச்சாரத்தால் முழுமையாக படிப்பில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியவில்லை.
மாநிலக்கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு மிகப்பெரியது. தற்போது மாநிலக் கல்லூரி மனிதநேய கல்லூரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. நான் படித்த கல்லூரிக்கு என்ன அறிவிப்புகளை வெளியிடலாம் என நேற்றிரவு யோசித்ததை வெளியிடுகிறேன். 2,000 பேர் அமரக்கூடிய அரங்கம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும். இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதியும் உங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை முடிந்தவரை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், கல்வி பயில பணம் தடையாக இருக்கக்கூடாது. அனைவரும் படிக்க வேண்டும். அனைத்து வாய்ப்புகளையும் அனைவரும் பெற வேண்டும். படியுங்கள், பட்டம்பெறுங்கள், அதில் உயர்ந்த நிலையை அடையுங்கள். பொன்முடியை அறிவுமுடி என கலைஞர் கூறுவார். கல்லூரிப் பேராசிரியராக இருந்து பல்கலைக்கழக இணைவேந்தராக இருக்கிறார் என்றார்.
மேலும், கற்றோருக்கு மட்டுமே சிறப்புண்டு என்பதை உணருங்கள். பட்டம் பெற்ற பெண்கள் தங்கள் தகுதிக்கேற்ற வேலைக்கு செல்ல வேண்டும். பெண்கள் தங்கள் விருப்பங்களை, அறிவாற்றலை வாழ்நாள் முழுக்க பயன்படுத்தும் சூழலை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஓராண்டு காலத்தில் பள்ளிக்கல்வித்துறை துள்ளி எழுந்துள்ளது. உங்கள் பெற்றோரின் கனவுகளையும், நாட்டின் கனவுகளையும் நிறைவேற்றுங்கள் என்று கூறினார்.








