இலங்கைத் தமிழர்களுக்கு உதவ டீக்கடையில் மொய் விருந்து

இலங்கை தமிழர்களுக்கு உதவிடும் வகையில், புதுக்கோட்டை அருகே டீக்கடை உரிமையாளர் ஒருவர் மொய் விருந்து நடத்தி நிவாரண நிதி திரட்டி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சாலை, மேட்டுப்பட்டி இந்திரா நகரில் உள்ள பகவான்…

இலங்கை தமிழர்களுக்கு உதவிடும் வகையில், புதுக்கோட்டை அருகே டீக்கடை உரிமையாளர் ஒருவர் மொய் விருந்து நடத்தி நிவாரண நிதி திரட்டி வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சாலை, மேட்டுப்பட்டி இந்திரா நகரில் உள்ள
பகவான் டீ ஸ்டால் உரிமையாளர் சிவக்குமார். இவர் கடந்த கஜா புயலின் போது
பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனது டீக்கடையில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த
கடனைத் தள்ளுபடி செய்தார். அதைத்தொடர்ந்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து கொண்டிருந்தார்.

கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த பொதுமக்களின் நிலையைக் கருத்தில்கொண்டு அப்பகுதியைச் சேர்ந்த பச்சிளம் குழந்தைகளுக்கு இலவசமாகப் பால் வழங்கினார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, தன்னால் பெரிய தொகை வழங்க முடியாது என்றும், அதனால் டீக்கடையில் டீ மொய் விருந்து நடத்தி அதில் வரும் வருமானத்தை மாவட்ட
ஆட்சியர் மூலமாக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்புவதற்காக இனறு
டீக்கடையில் டீ மொய் விருந்து விழா நடத்தினார்.

அதன்படி, இன்று தனது கடையில் தேனீர் குடிப்பவர்களிடம் எந்தவொரு தொகையும் வாங்காமல் இலங்கை நாட்டு மக்களுக்காக உதவிக்கரம் நீட்ட நிவாரணம் வசூல் செய்யப்பட்டு வருவதாகவும், வாய்ப்பிருந்தால் தமிழக முதலமைச்சரை சந்தித்து கொடுப்பேன் என்றும், இல்லாவிட்டால் மாவட்ட ஆட்சியர் மூலம் வசூல் செய்த தொகையை வழங்குவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு இலங்கை தமிழர்களுக்கு நிதி உதவிகளை வழங்கினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.