பிரதமர் வருகை – அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

பிரதமர் மோடி வருகையை ஒட்டி, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தந்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு…

பிரதமர் மோடி வருகையை ஒட்டி, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தந்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பிலும், பாஜக கூட்டணிக் கட்சிகள் சார்பிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு ஆளுநர் மாளிகையில் நேற்று இரவு தங்கிய பிரதமருடன் பாஜக நிர்வாகிகள் சந்தித்து நள்ளிரவு வரை ஆலோசனை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, இன்று காலை 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

மோடி வருகையையொட்டி, ஆளுநர் மாளிகை ராஜ்பவனில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் வரை பிரதமர் மோடி வரும் வழியில் பாதுகாப்பிற்காக தமிழக போலீஸார்கள் வரிசையாக நின்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2 கிலோ மீட்டருக்கு பிறகு மோடியை வரவேற்பதற்காக பாஜக தொண்டர்கள் வரிசையாக நின்று கொண்டிருக்கின்றனர். தலையில் வட இந்தியர்கள் போல தலைப்பாகை கட்டிக்கொண்டு வரிசையாக நின்று கொண்டும், மோடியை வரவேற்பதற்காக பரதநாட்டிய நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு நண்பகலில் சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட இருக்கிறார். அப்போது, பிரதமர் மோடிக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் வழியனுப்பும் நிகழ்வு நடைபெற இருக்கிறது. இந்த வழியனுப்பும் நிகழ்வில் பாஜக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்கவுள்ளனர்.

-ம.பவித்ரா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.