மத்திய அரசின் GeM இணையதளத்தில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் இணைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ர மாநிலம் புனேவில், ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் மாநாடு நடைபெற்றது. காணொலி முறையில் இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா தனக்குள்ள வாய்ப்பு மற்றும் சாத்தியத்தைத் தாண்டி தற்போது முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டார்.
வளர்ச்சிக்கான தனது இலக்கை இந்தியா அடையும் என்ற நம்பிக்கை உலகிற்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த நரேந்திர மோடி, உலக அமைதி, உலக வளம், உலகம் எதிர்கொள்ளும் சவால்கள், ஏற்றுமதிக்கான உலகலாவிய ஒருங்கிணைப்பு என எதுவாக இருந்தாலும், இந்தியாவை உலக நாடுகள் மிகுந்த நம்பிக்கையுடன் பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
வேறுபட்ட திறனாளர்கள், மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பவர்கள் என யாராக இருந்தாலும் நாட்டு மக்கள் அனைவரும் புதிய இந்தியாவை உருவாக்குவதில் ஒன்றிணைந்திருப்பதாக அவர் கூறினார். நாட்டின் நலனைக் கடந்து, உலக நலனை நோக்கி இந்தியா தற்போது நகர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்த பிரதமர், திறமை, வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகியவை முன் எப்போதும் இல்லாத அளவு தற்போது ஊக்குவிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக நாள்தோறும் டசன்கணக்கில் startups நிறுவனங்களும், வாரம்தோறும் ஒரு unicorn நிறுவனமும் பதிவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசு இ சந்தை இணையதளம், அனைத்து விதமான பொருட்களையும் கொள்முதல் செய்வதற்கான பொது தளமாக மாறி உள்ளதாகத் தெரிவித்த நரேந்திர மோடி, தற்போது கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், சிறு வியாபாரிகள், சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் போன்றோர், அரசு இ சந்தை மூலம் அரசிடம் நேரடியாக தங்கள் பொருட்களை விற்பதாகக் கூறினார். இதற்கான இணைதளத்தில் இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கை தற்போது 40 லட்சத்தை கடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Advertisement: