நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அவர் இரண்டாவது முறையாக பதவி ஏற்று இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதை முன்னிட்டு, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நவீன இந்தியாவை உருவாக்கியவர் நரேந்திர மோடி எனும் கருத்தை பதிவு செய்யும் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறினார். மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி, தர்மேந்திர பிரதான், அணுராக் தாகூர் ஆகியோருடன் இணைந்து இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாட்டு மக்களின் குரலை பிரதிபலிப்பவராக நரேந்திர மோடி உள்ளதாகத் தெரிவித்த நட்டா, நாட்டின் அரசியல் கலாச்சாரத்தையே அவர் மாற்றி இருப்பதாகக் குறிப்பிட்டார்.
தற்போது பொறுப்புள்ள, செயல்திறன்மிக்க, பதில் அளிக்கக்கூடிய அரசை நாடு பார்த்து வருவதாகத் தெரிவித்த நட்டா, இதை சாத்தியமாக்கியவர் நரேந்திர மோடிதான் என நாட்டு மக்கள் நம்புவதாகக் கூறினார்.
சேவை, நல்ல அரசு, ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் ஆகியவை நரேந்திர மோடி அரசின் ஆன்மாவாக திகழ்வதாகத் தெரிவித்த ஜெ.பி. நட்டா, கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் சேவை சென்று சேர வேண்டும் என்பதில் பிரதமர் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.









