பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வன்முறையை சமரசமின்றி எதிர்ப்பதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தற்போதைய மத்திய அரசு, துப்பாக்கியை பயன்படுத்துபவர்களை துப்பாக்கி மூலமாகவே எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
கடந்த 8 ஆண்டுகளில், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படுபவர்கள் யாருடனும் அரசு பேச்சுவார்த்தை நடத்தியதில்லை என தெரிவித்த அவர், சரணடைவதற்கான வாய்ப்பை மட்டுமே வழங்கி உள்ளதாகக் கூறினார்.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது நாடே அதிர்ச்சி அடைந்ததை சுட்டிக்காட்டிய ஆளுநர் ஆர்.என். ரவி, ஆனால், அடுத்த 9 மாதங்களுக்குள் அப்போதைய இந்திய பிரதமரும் அப்போதைய பாகிஸ்தான் பிரதமரும் சந்தித்து வெளியிட்ட கூட்டறிக்கையில் இரு நாடுகளும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிப்பதாக தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.
பாகிஸ்தான் எதிரியா நண்பனா என்பதில் தெளிவு இருக்க வேண்டாமா என கேள்வி எழுப்பிய ஆளுநர், ஆனால், நரேந்திர மோடி பிரதமரான பிறகு நிகழ்ந்த புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானுக்குள் புகுந்து வான்வழி தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாத செயலில் ஈடுபட்டால் அதற்கான விலையை கொடுக்க வேண்டும் என்ற செய்தியை நரேந்திர மோடி அரசு பாகிஸ்தானுக்கு அழுத்தம் திருத்தமாகக் கொடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.








