தமிழக முதல்வராக இன்று பதவியேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 158 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக எம் எல் ஏக்கள் கூட்டத்தில், திமுக சட்டமன்ற தலைவராக ஸ்டாலின் ஒரு மனதாகப் பதவியேற்றார். இதைத்தொடர்ந்து ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்நிலையில் இன்றைய தினத்தில் அவர் தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
பதவியேற்றதும், முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். ஆவில் பால் விலை ரூ 3 குறைப்பு, உயர்கல்வி படிக்கும் மாணவிகள் நாளை முதல் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய அனுமதி, கொரோனா நிவாரண நிதியாக மக்களுக்கு ரூ 4 ஆயிரம் வழங்குதல், தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறும் பொதுமக்களின் கட்டணத்தை அரசே ஏற்கும், நாளை முதல் மகளிருக்குப் பேருந்து கட்டணம் வசூலிக்கப்படாது போன்ற முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.
இந்நிலையில், தமிழக முதல்வராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழக முதல்வராக இன்று பதவியேற்ற ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.







