ஈகையும் கருணையும் பரந்த மனமும் கொண்ட தமிழக மக்கள் கொரோனாவுக்கு நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
கொரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா சந்தித்து வருகிறது. நாடு முழுவதிலும் தினந்தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நாடு முழுவதும் தினமும் மரணமடைந்து வருகின்றனர். டெல்லி, ஆந்திரப் பிரதேசம், உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தத் தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த வாரம் முழு ஊரடங்கை அறிவித்தார்.
மேலும் ஆக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. கொரோனாவுக்கு சிகிச்சை வழங்கச் சித்தா மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது., இந்நிலையில் கொரோனா நிவாரண நிதிக்கு மக்கள் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், ‘கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் மக்கள் பாதிக்காத வகையில் அவர்களுக்கு நிவாரண தொகை இன்று முதல் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக அரசுக்கு வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் உதவினர்.
இதுபோல அனைத்து மக்கள் உதவ முன்வர வேண்டும். ஈகையும் கருணையும் பரந்த மனமும் கொண்ட தமிழக மக்கள் கொரோனாவுக்கு நிதி வழங்க வேண்டும். முதல்வர் நிவாரண நிதிக்கு வரும் பணம், கொரோனா தடுப்பு பணிகளுக்கு மட்டுமே செலவிடப்படும். இது தொடர்பான விவரங்கள் அனைத்தும் வெளியிடப்படும்.







