ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் மும்பை அணி பேட்டிங் செய்தது. மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரியான் ரிக்கல்டன் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இவர்களது பார்ட்னர்ஷிப் 10 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. ரியான் ரிக்கல்டன் 61 ரன்களும், ரோகித் சர்மா 53 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்டத்தின் இறுதியில் 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 217 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 218 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடியது. இதில், தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் (13), வைபவ் (0) ரன்களில் ஆட்டமிழந்தனர். இதை தொடர்ந்து 117 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணி ஆல் அவுட்டானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆட்டத்தின் இறுதியில் ராஜஸ்தான் அணி 16.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் மும்பை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் எழுச்சி பெற்றுள்ள மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது








