ஆவினில் குறைந்த ஊதியத்திற்காக சிறார்களை பணிக்கு அமர்த்தியதாக வந்த தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஐஸ்கிரீம் பேக் செய்வதற்காக சில சிறார்களை ஹரிராம் காண்ட்ராக்ட் நிறுவனத்தின் மூலம் பணியமடுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. கடந்த 2 மாதங்கள் பள்ளி விடுமுறை என்பதால் தங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே தாங்கள் இந்த பணிக்கு வந்ததாகவும், ஆனால் 2 மாதமாகச் சம்பளம் வரவில்லை எனவும் சுமார் 30க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆவினில் சிறார்கள் பணியமர்த்தப்பட்டதாகக் வெளியான தகவல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில் இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சென்னை அம்பத்தூர் பால் பண்ணையில் சிறார்கள் பணி அமர்த்தப்படவில்லை. குறைந்த ஊதியத்தில் சிறார்களை பணிக்கு அமர்த்தியதாக வந்த தகவல் முற்றிலும் புறம்பானது . மேலும் உண்மைத்தன்மையை அறிந்து தகவலை வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன், எந்த தவறு நிகழ்வதையும் ஆவின் நிர்வாகம் அனுமதிக்காது. யாருடைய சம்பளத்தையும் நிலுவையில் வைக்காமல் வழங்கி வருகிறோம். எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல் இருக்க அனைத்து ஆவின் பால் பண்ணைகளில் தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும்.
இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.








