தமிழகத்திற்கு ஏற்கனவே 5 லட்சத்து 56 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ள நிலையில் இன்று கூடுதலாக 5 லட்சம் தடுப்பூசி மருந்துகள் தமிழகம் வந்தடைந்தன.
பொதுசுகாதார துறை வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு குளிர்பதன நிலையத்தில் கொரனா தடுப்பூசி இருப்பை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஏற்கனவே தமிழகத்திற்கு 5 லட்சத்து 56 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளதாகவும் இன்று கூடுதலாக 5 லட்சத்திற்கு 8 ஆயிரம் கோவிஷீல்டு மருந்துகள் வந்துள்ளதாக தெரிவித்தார்.
இதுவரை தமிழகத்திற்கு 10 லட்சத்து 65 ஆயிரம் மருந்துகள் வந்துள்ளதாகவும் முதற்கட்டமாக அதனை செலுத்துவதற்காக 6 லட்ச முன்களப் பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் இது வரை 25 ஆயிரத்து 908 பேர் மருந்துகளை எடுத்துக் கொண்டுள்ளதாகவும் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும் எனவும் தனியார் மருத்துவமனைகளுக்கும் மருந்துகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முதலில் மருத்துவர்களுக்கு ஒருவித தயக்கம் இருந்தது உண்மைதான் அது இப்போது இல்லை எனவும் ஒரு மருத்துவராக நாளை மறுதினம் நான் மருந்தை செலுத்திக் கொள்ள உள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்







