”நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை அமைச்சர் உதயநிதி ஏமாற்றக் கூடாது!” – மதுரை அதிமுக மாநாட்டில் இபிஎஸ் விமர்சனம்!

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை அமைச்சர் உதயநிதி ஏமாற்றக் கூடாது என, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற்றது. 51 அடி உயர…

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை அமைச்சர் உதயநிதி ஏமாற்றக் கூடாது என, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற்றது. 51 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து, எடப்பாடி பழனிசாமி மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது ஹெலிகாப்டர் மூலம் ஒரு டன் மலர்களை தூவி சென்னை மாவட்ட அதிமுக செயலாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து அதிமுக மாநாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாநாட்டு விழா மலரை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்கிற பட்டம் வழங்கப்பட்டது.

இதையடுத்து மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேசியவதாவது:

திமுகவுக்கு அனைத்தும் பொய்தான். திமுக முழுக்க முழுக்க பொய் பேசி தான் ஆட்சிக்கு வந்தனர். திமுகவுக்கு பொய் தான் மூலதனம். ஆனால் பொய் பேசுபவன் இல்லை இந்த பழனிசாமி. சாதித்து காட்டுபவன். இவர்களே நீட் தேவை கொண்டுவந்துவிட்டு.. இப்போது இவர்களே விலக்கு கோரி உண்ணாவிரதம் இருக்காங்க.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய ஒரே கட்சி அதிமுக மட்டுமே. அதிமுகவின் 10 ஆண்டுகள் ஆட்சியில் தமிழ்நாடு 25 ஆண்டுகள் முன்னோக்கி சென்றது. திமுகவின் 2 ஆண்டுகள் ஆட்சியில் தமிழ்நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்திய போராட்டம் ஒரு நாடகம். மாணவர்களை அமைச்சர் உதயநிதி ஏமாற்றக் கூடாது.

கச்சத்தீவை மீட்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பச்சைப்பொய் பேசுகிறார். கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்த போது தமிழ்நாட்டில் திமுக தான் ஆட்சியில் இருந்தது. மத்திய அரசுடன் 13 ஆண்டுகள் கூட்டணியில் இருந்த போது கச்சத் தீவை மீட்போம் என்று திமுக கூறவில்லை. ஆனால் தற்போது மீனவர்கள் வாக்கை பெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் பொய் பேசுகிறார். 2008-ல் கச்சத் தீவை மீட்கக் கோரி ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் கச்சத்தீவு தீர்மானத்தை அதிமுக நிறைவேற்றியது.

அதிமுகவை அழிப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ண வேண்டாம். திமுகவை காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதிமுக நிர்வாகிகள் மீதான பொய் வழக்குகளை நீதிமன்றம் சென்று சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.