நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மனோ தங்கராஜ் ஆகியோர் பரப்புரை மேற்கொண்டனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன் நிறைவடையும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களும் சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் 24 வேட்பாளர்களை ஆதரித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, அரசுப் பேருந்தில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம், நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட திமுக ஆட்சியின் திட்டங்களைப் பட்டியலிட்டு வாக்கு சேகரித்தார். இந்த பரப்புரையில் ஏராளமான திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பேரூராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்தார். மேலும், பாஜக, கள்ள பணம் போன்று பளபளப்பாக இருக்கும் எனவும் அதை கையில் வைத்திருந்தால் ஆபத்து எனவும் விமர்சித்தார்.
இதேபோல், சென்னை மாநகராட்சியின் 122-வது வார்டு திமுக வேட்பாளர் ஷீபா வாசுவை ஆதரித்து திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு உள்ளிட்டோர் தேனாம்பேட்டையில் பரப்புரை மேற்கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








